Aroor Boat Festival | ஆரூர் தெப்ப திருவிழா

500 பேர் வரை பயணிக்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆரூர் தெப்பத் திருவிழாவின் சிறப்புகள்! இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுப்பட்டுள்ளனர். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெப்பத் திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரமாண்டம்தான்… அசைந்தாடும் ஆழித்தேர், பரந்துவிரிந்த கமலாலயக் குளம், செங்கழுநீர் ஓடை, விஸ்தாரமான ஆரூர் ஆலயம்… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோலவே திருவாரூர் தெப்பமும் தெப்பத் திருவிழாவும் கூட பிரமாண்ட வடிவில் உலா வருவதே என்பது அந்த ஊர் மக்களின் பெருமை என்றும் சொல்வார்கள். இந்தத் தெப்பத் திருவிழாவானது வருகின்ற மே 20-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைப்பெற உள்ளது.

தெப்பத் திருவிழா:

சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சர்வதோஷப் பரிகார தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பங்குனி உத்திர விழாவின் இறுதி நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. தற்போது இந்தத் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு நிகழ்வான தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

தியாகராஜர் கோயிலின் எதிரே உள்ள கமலாலயம் என்னும் திருப்பெயர் கொண்ட குளத்தில், இந்த தெப்பத் திருவிழாவானது நடைபெறும். குளமே ஆலயமாகப் போற்றப்படும் இந்த கமலாலய குளமானது, மகாலட்சுமி தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்தத் திருக்குளத்தில் புனித நீராடினால், 12 மகாமகத்தில் நீராடிய புண்ணியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. தசரதன், அரிச்சந்திரன் போன்ற மன்னர்களும், ரிஷிகளும், சித்தர்களும், இந்திரன் போன்ற தேவர்களும் புனித நீராடிய திருக்குளமாக இது உள்ளது. இந்தத் திருக்குளமானது திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு நிகரான 5 வேலி பரப்பளவு கொண்டதாகும்.

தெப்பத் தொழிலாளர்கள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குளத்தில் தெப்பமானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் நீரில் மிதந்து வரும்போது, காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒரு திருக்கோயிலே குளத்தில் மிதந்து வருவதை போன்ற காட்சியைக் கொடுக்கும். இந்தப் பரவச காட்சியை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திருவாரூரில் திரள்வார்கள்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய தெப்பம் இந்தத் திருவாரூர் தியாகராஜர் தெப்பம்தான். தமிழகத்தில் எந்த ஒரு தெப்பத்திலும், மக்களை ஏற்றும் நடைமுறை கிடையாது. ஆனால், திருவாரூர் தெப்பத்தில் மட்டும்தான் மக்களை ஏற்றும் நடைமுறை உள்ளது. அந்த அளவிற்கு பரப்பளவில் மிக பெரியதாக இருக்கும் இந்தத் தெப்பம். தெப்பத் திருவிழாவின் போது சுமார் 500 பேர் வரை தெப்பத்தின் மீது அமர்ந்து பயணிப்பார்கள். இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுப்பட்டுள்ளனர். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது.

தியாகராஜர், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், விநாயகர், முருகன் ஆகிய கடவுள்களின் திருவுருவங்களுடன் தெப்பத்தின் மண்டபமானது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தெப்பத்தில் ‘பார்வதி கல்யாணசுந்தரர்’ எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெப்பத்திருவிழாவானது வருகின்ற மே மாதம் 20-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை, தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற உள்ளதால் தற்போது திருவாரூரில், விழா ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கி உள்ளது. அங்கு தெப்பம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த செல்வம் என்பவரிடம் பேசினோம்…

தெப்பம்

“நான் ஆரூரான் சர்க்கரை ஆலையில வேலை பாக்குற சாதாரண ஒரு தொழிலாளிதான். 1964-ம் வருசத்திலேருந்து எங்க குடும்பம்தான் இந்தத் தெப்பம் கட்டுற வேலைய செஞ்சிட்டு வருது. இப்போ மூணாவது தலைமுறையா நான் இந்தத் தெப்பம் கட்டுற வேலைய செஞ்சிட்டு இருக்கேன். இந்த அருள் நிறைந்த தெப்பத்தைக் கட்டுறதையே, நான் என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சா மிகப்பெரிய பாக்கியமா கருதுறேன்!” என்று பேசிய செல்வம் தெப்பத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி கேட்டதும், சொல்லத் தொடங்கினார்.

“இந்தத் தெப்பம் கட்டுறதுக்கு மிக முக்கியமான பொருள்ன்னு பார்த்தா தகர பேரல்கள்தான். அதுதான் இந்தத் தெப்பதுக்கு மிதக்குற தன்மையைக் கொடுக்குது. அந்தத் தகர பேரல்களை எடுத்து நல்லா இரும்பு மூடி போட்டு முடிடுவோம். பிறகு அதைத் தண்ணீல அழுத்தி, எந்த பேரலாவது ஓட்டையா இருக்கான்னு சோதனை பண்ணி பார்ப்போம். அதுல ஓட்டையில்லாத தகர பேரல்களை மட்டும்தான் நாங்க தெப்பம் கட்ட பயன்படுத்துவோம். கிட்டத்தட்ட 400-லிருந்து 500 தகர பேரல்கள் வரை இந்தத் தெப்பம் செய்ய எங்களுக்குத் தேவைப்பட்டன.

முதல்ல 216 தகரபேரல்களை ஒரு அடுக்காகவும், கூடுதலாக இன்னொரு செட் 216 தகர பேரல்களை அதுக்கு மேல இன்னொரு அடுக்காகவும் வெச்சு அடுக்கி இரும்பு கம்பிகளால் பிரியாத அளவுக்கு இறுக்கிக் கட்டினோம்.

அதுதான் இந்தத் தெப்பத்துக்கு அடி பாகம். அந்தத் தகர பேரல்கள் உள்ள காத்து இருக்கறதுனால, அது தண்ணீல மிதக்க ஆரம்பிச்சிடும். அதன்பிறகு அதுக்கு மேல மூங்கில்களைப் பயன்படுத்தி பெரிய அளவுல ஒரு படுக்கை சட்டத்தை உருவாக்கினோம். அந்த மூங்கில் சட்டத்துக்கு மேல தேக்கு மர பலகைகளைப் போட்டு கிட்டத்தட்ட 2500 சதுர அடி பரப்பளவில் இந்தத் தெப்பத்தோட அடி மேடைய கட்டமைச்சிருக்கோம். அதுக்கு மேல 16 மரதூண்கள வெச்சு தெப்ப மண்டபத்தைக் கட்டி, அதுக்கு மேல விமானம்ன்னு சொல்லுற தெப்ப மண்டபத்தோட கோபுரத்த, ராட்சஷ கிரேன் உதவியோட உச்சயில தூக்கி வச்சு இந்தத் தெப்பத்தைக் கட்டியிருக்கோம்.

தியாகராஜர் உலா

இறுதியா இதுக்கு வண்ணம் பூசி, மலர்கள் சுற்றி, கலர் கலர் லைட்களை வெச்சு இந்தத் தெப்பத்தை அலங்கரிப்போம். கலர் கலர் லைட்டுகளோட குளத்துல இந்தத் தெப்பம் மிதந்து வரும்போது ஒரு கோயிலே மிதந்து வர்றது மாதிரி இருக்கும்! அதைப் பார்க்குறப்போ, தேவலோகத்தில் தியாகராஜர் உலா வர மாதிரியே ஒரு சிலிர்ப்பும் பூரிப்பும் வரும் பாருங்க… ‘ஆரூரா! தியாகேசா’ன்னு கதறத் தோணுங்க!” என்கிறார் செல்வம்.

அதனால்தானே திருவாரூர் அற்புதங்கள் என்று இந்த விழாவையும் கொண்டாடுகிறோம்!