திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் – காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் – காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது நிறைவேற்றபடாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
மக்கள் கோரிக்கை:
இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் ஏதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையாவது இவ்வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தற்போது எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே ரயில்சேவையை தொடங்கியுள்ளது தெற்கு ரயில்வே. வரும் ஜூன் 4 ஆம் தேதி மதியம் 12:35 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து முதல் ரயில் இயக்கப்படுகிறது. அங்கிருந்து கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு 5 ஆம் தேதி காலை 5:50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
அதேபோல், வேளாங்கண்ணியிலிருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் ரயில் அதே மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு மறுநாள் மதியம் 12:00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. வாரம் 2 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில் 14 பெட்டிகள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த புதிய ரயில் சேவையால் இந்த மார்க்கத்தில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.